Monday, 19 March 2012

திசை மாறும் தூண்கள்..!

நம் வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிக பெரிய வரம் இளமை பருவம்..!  ஆண் ,பெண் என இரு தரப்பினருக்குமே எவ்வளவு ஒரு அழகான ,ஆக்கபூர்வமானபருவம்..! ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றலும் அறிவும்,துணிவும்,துடிப்பும் அவர்களின் எழுச்சியும்மிக பெரும் சக்தி என்றால் அது மிகையில்லை..! ஒரு சமுதாயத்தில் எந்த ஒரு சமூக மாற்றமும் இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் நடை பெற்றதில்லை..! தன் வயதின் முழுசக்தியையும் திறமையையும் வெளிப்படுத்தும் பருவம் இளமை பருவம் ..!


ஆனால் தன் சக்தியை ,தன் தேவையை ,தன் பொறுப்பை ,சரியாக இளைஞர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்றால் பெருமளவு இல்லை என தான் தோன்றுகிறது...! இப்போது சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணம்இளைஞர்களாக தான் இருக்கிறார்கள்...! தன் தவறான நடவடிக்கையின் காரணத்தால் குற்றங்களை செய்து விட்டு தன் வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியை சிறை வாழ்க்கையில் கழிக்க வேண்டிய கட்டாயத்தில்இருக்கிறார்கள்...!


நாம் அனைவருமேசமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது..! தான் கற்பிக்கும்பள்ளியில் தன் மாணவனால் ஒரு ஆசிரியை பள்ளி வளாகத்தில் கொல்லப் பட்டதும்,ஒரு பெண் நம்பிக்கையோடுநண்பனாக பழகியவர்களாலே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் ஆன இரு நிகழ்வுகள் தான் அவை...! சமூகத்தில் மீது அக்கறையும்,பொறுப்பும் கொண்டஒவ்வொருவரையும் அதிர்ச்சியும்,கவலையும் கொள்ள வைத்த சம்பவங்கள் இவைஎன்றே சொல்லலாம்.


இவை மட்டும் அல்லாதுபள்ளிப் பருவ காதல்,பள்ளிப் பருவ கர்ப்பம்,பள்ளிப் பருவ குடிப்பழக்கம்,வகுப்பிலேயே சக தோழியை மோசமாக படம் எடுத்து அனைவருக்கும் அனுப்பி வைப்பது,தன் ஆசிரியையை படம் எடுத்து இணையத்தில் தவறான முறையில் பதிவு செய்வது ,பெற்ற மகனே தன் சொந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆள் அனுப்பி திருட வைத்தது, தங்கையாக நினைக்கக் கூடிய நண்பனின் மனைவியை அழைத்துக் கொண்டு ஓடுவது என்று இப்படிஇன்னும் நிறைய விசயங்கள்.

ஆரம்பத்தில்..! இப்படி எல்லாம் கூட நாட்டில் நடக்குமா..! நடக்குதா..? என  கேட்ட செய்திகள் எல்லாம் இப்போது மிக சர்வ சாதரணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது..! நாமும் ஒவ்வொன்றையும் கேள்விப்படும் போது இது என்ன புதுசா நடக்குதா என்ன ..? என்றுமனதை சமாதானப் படுத்த பழகி விட்டோம்...! நம் மனம் எல்லா அக்கிரமங்களையும் தாங்கி கொள்ளும் சக்தி படைத்ததாகி விட்டது..! தினசரி புதிது புதிதாக குற்றங்களை பார்ப்பதும் கேள்விபடுவதுமே அதற்கு காரணம்..! அதிகளவு குற்றம் நடத்துபவர்களில் பின்னணியை பார்த்தால் பெற்றோர்கள் நன்கு படித்தவர்களாகவும்,நல்ல செல்வாக்கு உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான ஒன்றாக உள்ளது...!   


முன்பு உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்கள் எல்லாம் இப்போதுதன்கோர கைகளை விரித்துக் கொண்டே வந்து நம் ஊரின் மையத்தில் வந்து நிற்கிறது...! அது நம் வீட்டு கதவை தட்டுவதற்கு முன் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று தோன்றுகிறது..! சரி,இது போல நடக்க என்ன காரணம்..? யார் காரணம்..?  என பார்த்தால்குற்றம் சுமக்க வேண்டியவர்களில்முதல் குற்றவாளி பெற்றோர்களாகத் தான் இருக்கிறார்கள்..! ஒரு பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது தாய் தான்..! தந்தை என்பவர்பொருளாதார தேவைக்காக பெருமளவு நேரம் வெளியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்

இப்போது அநேக வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான்..! இரண்டு என்பது கூட இப்போது குறைந்து ஒன்று என்பது தான் அதிகளவில் இருக்கிறது..! காரணம் வேலைக்குப் போவதால் கவனிக்க ஆள் இல்லை என்பது..! பிள்ளையை யார் பார்த்துக் கொள்வது..? வீட்டில் சரியான வழிகாட்டுதலோடுபெரியவர்கள் இருந்தால் சரி, இல்லை என்றால் என்ன செய்வது..? வேறு வழி அதற்கென்றே இருக்கும் ஹோம்களே கதி..! சிறு வயதில் இருந்தே தாய் ,தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளை அந்த பாசம் கிடைக்காத போது ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு உலகத்தை நிர்ணயபடுத்திக் கொண்டு அந்தஉலகத்தில் உலா வரத்தொடங்குகிறது...!அதில் இப்போது தாய்க்கும்,தந்தைக்கும் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை...! இவை எல்லாமே வெளியில் தெரியாத அவர்களின் பால் உள்ளே நடக்கும் உளவியல் மாற்றங்கள்..!


பணம் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலை இப்போது அதிகளவு காணப்படுகிறது.,,! உலகத்திலேயே தன் மகன் தான் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும்..! அனைவரும் பெருமையாக சொல்ல வேண்டும் என்பதற்காக பணத்தை எல்லா இடத்திலும் வாரி இறைக்கும் பெற்றோர் அதிகம்..! நல்ல வசதியையும்,நல்ல படிப்பையும் கொடுக்க நினைக்கும் பெற்றோர் மறந்தது தன் மகனை சமுதாயத்திற்கு ஏற்ற நல்ல மனிதனாக வளர்க்க வேண்டும் என்பதை..!


பிள்ளைகள் கேட்கும் எல்லா நவீன பொருள்களையும் வாங்கி கொடுக்கும் பெற்றோர் அவர்கள் அதை நல்ல முறையில் பயன் படுத்துகிறார்களா என கவனிக்காமல் விடுவது தான் அவர்கள் செய்யும் தவறு.! ..பருவ வயதில் அது ஆணாகட்டும்,அல்லது பெண்ணாகட்டும் இருவருக்கும் உடலில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்கள் குறித்தான சரியான வழிகாட்டுதல் தேவை..! கண்டிப்பா இப்போது தான் அவர்களின் மீது கூடுதல் அக்கறையும் கவனமும் தேவை...!



ஆனால் பெற்றோருக்கு அவர்களோடு மனம் விட்டு பேச நேரம் இருப்பதில்லை..!பெரும்பாலான பெற்றோருக்கு நம் பிள்ளையின் நண்பர்கள் யார் எனத் தெரியாது..! அவர்கள் எப்படிப் பட்ட நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாது..! பிள்ளைகளும் இப்போது பெற்றோரை எதிர்பார்பதில்லை..!அவர்களுக்கு இப்போது தேவை பணமும் அவர்கள் விரும்பும் நண்பர்களும் தான்..! இந்த மாதிரி வளர்ந்த பிள்ளைகளின் பார்வையில் பெற்றோர்கள் என்பவர்கள் தன் தேவைக்காக பணம் கொடுப்பவர்கள் மட்டும் தான்..!


குற்றங்களின் காரண கர்த்தாவில் இப்போது இணையமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையில்லை...! இணையத்தில் அதற்கென்று தனியாகத் தேடித் போக வேண்டாம் நாம் வேறு ஒன்றைத் தேடி எழுத்தை தட்டினாலே வன்முறை குறித்தான விசயங்களும் ஆபாச படங்களும்,ஆபாச பதிவுகளும் வந்து கொட்டுகிறது..! இதில் தனிமை என்பது நல்ல தெளிவாய் இருக்கும் மனிதர்களையே சற்று நிலை தடுமாறச் செய்யும் விஷயம்...! இதில் எளிதில் உணர்ச்சி வசப்படும் டீன் ஏஜ்ஜில் இருக்கும் பிள்ளைகள் தனிமையில் இதைப் பார்த்தால் என்ன ஆகும்...?


இயல்பாகவே எதிர்பாலினர் குறித்தான தேடுதலும், சிந்தனையும்,அதிகம் இருக்கும்பருவம்இது...!சரியானவழிகாட்டுதலோடும்,தன்னம்பிக்கையோடும் வளர்க்கப் படும் பிள்ளைகளுக்கு இது ஒரு பொருட்டாக இருப்பதில்லை..! அவர்களுக்குத் தெரியும் நம் இலக்கு எது என்றும்..!  எதை நோக்கி நாம் போக வேண்டும் என்பதும்..! இந்த மாதிரி விசயங்களில் மாட்டிக் கொண்டால் நம் எதிர்காலம் பாழாகி விடும் என்பதால், அவர்கள் தன் நட்பு வட்டத்தையும் கவனமாக தேர்தெடுத்துக் கொள்கிறார்கள்..! பொதுவாக நட்பு வட்டம் என்பது எப்போதும் நமது சரி தவறுகளை திருத்தி அதை உரிமையாக எடுத்துச் சொல்லக் கூடியதாக இருக்க வேண்டும்...! தெளிவான மன நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு இயல்பாக தன் வயதிர்க்குண்டான  மனத்தடுமாற்றங்களை மிக எளிதாக கடந்து விட முடிகிறது ..!


ஆனால் சிறு வயதில் இருந்தே சரியான வழிகாட்டுதலோடு வளராத  பிள்ளைகளின் மனம் அதை நோக்கியே போகும்..! தப்பைத் தட்டிக் கேட்க ஆள் இல்லாமல் தனிமையில் தன் இஷ்டத்திற்கு வளரும் பிள்ளைகளுக்கு, தப்பான விசயங்களை ஆரம்பத்தில் பார்க்கும் போது இருக்கும் கொஞ்ச நஞ்ச குற்ற உணர்ச்சியும் ஒரு கட்டத்தில் போய் விடுகிறது...! எது சரி எது தவறு என்பதைத் தாண்டி தன் ஆசைகளையும் தேவைகளையும் எவ் விதத்திலும் நிறைவேற்ற கொள்ள துணிந்து விடுகிறார்கள் என்பதே உண்மை...! இது தான் மன வக்கிரத்தின் வெளி தெரியாத உச்சக்கட்டம்...! இவை தான் இந்த மாதிரி குற்றங்கள் நடப்பதற்கு முக்கிய காரணம்..!


சரி வேலைக்கு எல்லாருமா போறாங்க வீட்டில் அம்மா இருக்கும் பிள்ளைகளும் தானே தப்பு பண்ணுது என்று கேட்டால்...? உண்மை தான்.மறுக்க முடியாது...! ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்தப் பிள்ளை அதிக செல்லத்தால் தன் அறியாமை அம்மாவால் தன் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கிறது..! தன் தந்தையின் அருகாமை இல்லாமல் இருக்கிறது.


இதற்கான தீர்வாக சிறு வயதில் இருந்தேஅவர்களுக்கு ஊட்டப்படும் அழுத்தமான இறைநம்பிக்கை தான் சரியான ஒன்றாக இருக்கும்..! சிறு வயதாக இருக்கும் போதே அவர்களுக்கு மார்க்க சம்பந்தமான விசயங்களை கதை சொல்வது போல சொல்லி,நன்மை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும் ,அடுத்தவர்களுக்கு தீமை செய்தால் என்ன கிடைக்கும் என்பதையும், இந்த உலகத்தில் நேர்மையாகவும் உண்மையாகவும் நம்பிக்கையாகவும் நடக்க வேண்டியதன்  அவசியத்தையும் தெளிவாக புகட்டி விட வேண்டும்...!


சக மனிதர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகம்,மோசடி,பொய் பித்தலாட்டம்,ஏமாற்றுதல் போன் இன்ன பிற தவறான செயல்களை இறைவன் விரும்புவதில்லை என்பதையும் அவன் அது குறித்து கடுமையாக கோவப்படுவான் என்பதும் அவர்களின் மனதில் அழுத்தம் திருத்தமாக சிறு வயதில் இருந்தே பதிவு செய்ய பட வேண்டும்...!


நாம் அனைவருமே பொறுப்பாளிகள் ஆவோம்..! நாம் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை பற்றி மறுமையில் விசாரிக்கப் படுவோம்..! அதற்கு சரியான காரணம் சொல்லப்பட வேண்டும்...! அதில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது...! சரியான முறையில் வளர்க்க படாத பிள்ளைகள் நாளை நமக்கு மிக பெரிய துன்பத்தை தர தயாராக இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்" (அல்-குர்ஆன் 8:28) 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

Wednesday, 14 March 2012

ரியாலிட்டி ஷோ..?

இப்போது உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில்,வெவ்வேறு பெயர்களில் வெளி வந்து கொண்டிருப்பது ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் தனி மனித உறவுகளை சீர்குலைக்கும் நிகழ்ச்சிகள்..! தனிப்பட்ட மனிதர்களின் கண்ணீர் ,துயரம்,ஆவேசம், என்று அவர்களின் அந்தரங்கத்தை கூறு போட்டு காசு பார்க்கும் சேனல்களின் கண்டுபிடிப்பு தான் இந்த ரியாலிட்டிஷோக்கள்..!


மாமியார் , ,மாமனார் ,மருமகன் ,மருமகள்,அம்மா ,பிள்ளை ,பெண் ,நாத்தனார்,மச்சினர், அண்ணன் மனைவி ,தம்பி மனைவி ,என ஒரு உறவு விடாமல் அனைவரையும் அழைத்து அவர்களை எதிர் எதிரே உட்கார வைத்து அவர்களின் குறைகளை கேட்கிறோம் என்ற பெயரில், தன் சேனலின் டி.ஆர்.பி ( டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் ) என்னும் வழிமுறையை அதிகப் படுத்த எல்லாவித முறையையும் கையாள ஒவ்வொரு சானலும் தயாராக இருக்கிறது..! இவர்களுக்கு சமுதாயத்தின் மீது எந்த பொறுப்போ ,அக்கறையோ கிடையாது..! அவர்களின் நோக்கம் எல்லாம் வெறும் வர்த்தகம் மட்டுமே.


பொதுவாக குடும்பத்தில் ஒரு பிரச்சனை என்றால் இரு தரப்பினரும் மனம் விட்டு பேசினாலே பாதி பிரச்னை சரியாகி விடும்..!  குடும்பத்தில் இருக்கும் வீட்டு பெரியவர்களும், சம்பந்தப்பட்டவர்களும்,உட்கார்ந்து பேசி ,எது சரி அல்லது எது தவறு என்று கலந்து ஆலோசிப்பது தான் சரியான வழி முறையாக இருக்கும்..! ஆனால் இதில் எந்த விதத்திலும் சம்பந்த படாத மூன்றாம் நபரின் தலையீடு குடும்ப விவகாரங்களை தீர்ப்பதற்கு எதற்கு என்பது தான் தெரிய வில்லை.


சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் ,உறவுகளின் பிரச்சனையை சரி  செய்கிறோம் என்ற பெயரில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவை பார்க்க நேரிட்டது...! கணவர்கள் ஒரு புறம்,மனைவிகள் மறுபுறம்,நிகழ்ச்சியை நடத்துபவர் என்ற பெயரில் ஒருவர்..! அவர் சானலில் வாங்கும் லட்சக்கணக்கான சம்பளத்திற்கு உண்மையாக உழைக்கும் விதத்தில் அவரின் கேள்விகள், இருதரப்பினரையும் தூண்டும் விதத்தில் இருந்தது...! அவர் அப்படி கேட்டால் தான் நிகழ்ச்சி சூடு பிடிக்கும்,வாக்கு வாதங்கள் அனல் தெறிக்க நடக்கும் என்பது அவருக்கு நன்கு தெரியும்...! அவர் எதிர் பார்ப்பதும் அது தான்.


அதில் ஒரு கேள்வி..! கணவனிடம் மனைவிக்கு பிடிக்காத விஷயம்..!அதே போல மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத விஷயம்..! என்று.சொல்லவா வேண்டும் இந்த கேள்விக்கு பதில்களை..! போட்டி போட்டு கொண்டு சரமாரியாக கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருந்தது .அதில் ஒரு பெண் சொல்ல தகவல் உண்மையில் தூக்கிவாரிப் போட்டது..!இதை சொல்லி விட்டு பெரிய சாதனை செய்த மாதிரி பெரிய சிரிப்பு வேறு அந்த பெண்ணுக்கு..!அதை பார்த்ததும் யார் பெற்ற பிள்ளையோ ஆனால் கன்னத்தில் ஒன்று போடலாம் என்று தோன்றியதை தவிர்க்க முடிய வில்லை..! தன் கணவரைப் பற்றிய மிக சென்சிடிவான விஷயம் குறித்து ,அவ்வளவு எளிதாக யாருக்கும் வெளி தெரியாத,தெரிய வேண்டிய அவசியம் இல்லாத ஒரு தகவல் அவர் சொன்னது...! இந்த பதிலை அந்த கணவரும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என்பது அவரின் முகத்தைப் பார்த்தால் தெரிந்தது.


எது அந்த பெண்ணை இப்படி தன் கணவரின் ஒரு அந்தரங்கமான விஷயத்தை லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் சொல்ல வைத்தது..? இதனால் அவர் அடைய போவதென்ன..? சொன்னதால் இவரின் பிரச்னை தீரப் போகிறதா..? வீட்டில் கணவனும் மனைவியுமாக உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய ஒரு விஷயத்தை இப்படி பகீரங்கப் படுத்த வேண்டிய தேவை என்ன.? தன் முகம் தொலைக்காட்சியில் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த அளவு தன் தரத்தையும் ,தன் கணவனின் செயலையும் பறை சாற்ற வேண்டுமா ..?  இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து தானே இருக்க வேண்டும்..? இந்த நிகழ்ச்சி அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காதா..? முன் போல அந்த கணவரால் அந்த பெண்ணுடன் இயல்பாக இருக்க முடியுமா ..? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடிய வில்லை.


கணவன் மனைவி உறவு என்பது எவ்வளவு அழகான ஆழமான உறவு..! மற்ற எல்லா உறவிலும் மாற்று எவருடனும் ஒப்பீடு செய்ய முடியும்..! ஆனால் இந்த உறவை எந்த உறவோடும் ஒப்பிட முடியாதே..! கருத்து வேறுபாடு இல்லாத கணவன் மனைவி யாரும் இங்கு உண்டா என்றால்,கண்டிப்பாக  இருக்க முடியாது..! அப்படி இருப்பதற்கான சாத்தியமும் இல்லை என்பதே உண்மை...! இரு வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த ,வாழ்ந்த இரு உயிர்கள் ஓருயிராக வாழ ஆரம்பிக்கும் போது தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது என்பது மிக இயல்பான ஒன்று..! ஆனால் அதை எல்லாம் தாண்டி சரியான பரிதலும்,ஒருவரின் பால் ஒருவருக்கு இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் ,நேசமும் இருந்து விட்டால் பிறகு எந்த வித பிரச்சனையும் அவர்களை ஒன்றும் செய்யாது.


அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (அல் - குரான்2:187)


இந்த ஒரு ஆழமான வசனத்தின் மூலமாகவே கணவன் மனைவி உறவு என்பது எப்படி பட்டது..! அது எப்படி இருக்க வேண்டும் என்பது நமக்கு உணர்த்தப் பட்டு இருக்கிறது..! ஆடை எப்படி நம் மானத்தை காக்கிறதோ அப்படி தான் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் தன் துணையின் குறையை,அந்தரங்கத்தை ,ரகசியத்தை,காக்க வேண்டியது கடமை ஆகும்...! நமக்கு இயற்கையாக ஏற்படும் சில தேவைகளை,
தேடல்களை ஹலாலான வழியில் பெற வேண்டும் என்றால் கணவன் மனைவி என்ற பந்ததால் மட்டுமே சாத்தியம்...! அது தான் இறை வகுத்த சட்டமும்.

குறை இல்லாத மனிதர் என்று இவ்வுலகில் யாரும் உண்டா..? அப்படி இது வரை யாரும் இருந்து  இருக்கிறார்களா..? என்றால்அப்படி யாரும் இல்லை அப்படி யாரும் இருக்கவும் முடியாது ..! குறை, நிறை சேர்ந்தவன் தானே  மனிதன்..! .தன் துணையின் குறை பிடிக்க வில்லை என்றால் அதை மெதுவாக மாற்ற முயல்வது தானே புத்திசாலித்தனம்..! அந்தக் குறையும் நம் வாழ்க்கைக்கோ ,மார்க்கத்திற்கோ,பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில்இல்லை என்றால் அதை அப்படியே மாற்ற முயலாமல் ஏற்றுக் கொள்வதே சரி. 


இங்கு முழுதாக, ஆணை அறிந்த பெண்ணும் இல்லை..! பெண்ணை, அறிந்த ஆணும் இல்லை என்பதே உண்மை..!அறிந்து கொள்வதும் அவ்வளவு எளிது இல்லை..! தேவையும் இல்லை..! இறையின் படைப்பு  அப்படி தான் படைக்க பட்டிருக்கிறது..! ஆணின் இயல்பு தன்மை வேறு..! பெண்ணின் இயல்பு தன்மை என்பது வேறு..! இதை அவரவர் இயல்பு படி சரியாக புரிந்து கொண்ட ஆணும் பெண்ணும் தான் வெற்றியாளர்கள்...! இந்த சரியான புரிதல் என்பது ஒருவர் அடுத்தவர்  மீதான நேசத்தையும்,மதிப்பையும், மரியாதையும் கொடுக்கிறது...! குறைகளை மன்னிக்க சொல்கிறது..!.இந்த ஒற்றுமையின் காரணமாக நல்ல அறிவான,பண்பான சந்ததிகளை கொடுக்க முடிகிறது.


இந்த மாதிரி ஷோக்களை பார்க்கும் போது..! பொதுவில் உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் வெளியிடும் வார்த்தைகளில் பொருட்டு விளையும் பின் விளைவுகளை நினைக்கும் போது அவர்களின் மீது பரிதாபமே வருகிறது. ஏற்கனவே உறவுகள் சிக்கலாகி கொண்டிருக்கும் காலம் இது...! உறவுகளின் எண்ணிக்கையும் சுருங்கி கொண்டு வருகிறது...! இதில் இருக்கும் உறவுகளையும்இல்லாமல் பண்ணுவதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி கண்ணுக்கு தெரியாமல் அதை பற்ற வைக்கும் வேலையை தான் சானல்கள் செய்து கொண்டு இருக்கின்றன.


ஒரு மனிதன் என்பதற்கு உரிய சரியான அர்த்தத்தோடு ஒருவன்  வாழ வேண்டும் என்றால் அவன் அங்கம் வகிக்கும் பாத்திரம் ( மகன்,சகோதரன்,கணவன்,மாமா,மச்சான்,நண்பன் .....................) என அவன் பொருப்பேற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரத்தின் சார்பாகவும் அவன் நம்பிக்கையாகவும்,உண்மையானவனாகவும்,நேர்மையானவனாகவும்,நடுநிலை தவறாதவனாகவும் இருக்க வேண்டும்..! அவன் இல்லாமல் போனாலும்,அவனின் நினைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இனிமையான நினைவாக இருந்தது எனில் அது தான் அவன் இவ்வுலகத்தில் பெற்ற வெற்றி.


ஆனால் இந்த வெற்றி அவ்வளவு எளிதா என்றால் எளிதில்லை..! இதற்கு தான் மறுமை குறித்தான சிந்தனை தேவை படுகிறது..! அனைவரும் சொல்வது தான் நமது இறப்பு என்பது எப்போது வேணாலும் வரும்..!அதனால நாம தயார் நிலையில இருக்கணும் என்று..! ஆனால் உண்மையில் அது ஆழ்மனதில் திடத்தோடு பதிவு செய்ய பட்டிருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்..!  


அந்த உணர்வு எப்போதும் நம் சிந்தனையில் ஓடி கொண்டிருந்தால்..! நாம் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை வேறாக இருக்கும்..! எழுதி கொண்டிருக்கும் நான் இந்த பதிவை பதிவு செய்வது உறுதியில்லை என்ற நிலைப் பாட்டையும் ,எப்போது வேண்டுமானாலும் இறைவன் என் உயிரை கைப்பற்றுவான் என்றும் அப்படி அவன் கைப்பற்றி அவன் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை நான் வைத்திருக்கேனா என்று உறுதியாக நம்பும் போது தான் சக மனிதர்களை அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களை நேசிக்க சொல்கிறது..!தன் தவறுகளையும் யார் சொன்னாலும் திருத்தி கொள்ள முடிகிறது..! உறவுகளையும்  கொண்டாட சொல்கிறது.


விட்டு கொடுப்பவர் எப்போதும் கெட்டு போவதில்லை. 


சகோதரி.
ஆயிஷா பேகம்.

Friday, 9 March 2012

The Prophet Muhammad's Last Sermon


Friday, 17 February 2012

முதல் விருது



எனது முதல் விருது Jaleela Kamal சகோதரி வழங்கி உள்ளார்கள் .என்னை நினைவு வைத்து கொடுத்தது மிகவும் சந்தோசமா இருக்கு.அவர்களுக்கு எனது நன்றிகள்..:-))  

அதிரடி எடைக் குறைப்பு..!

நாம் அனைவரும் அதிரடி விலைகுறைப்பு பற்றித் தானே கேள்வி பட்டு இருக்கோம் ...! இது இப்போது உலகத்தில் பிரபலமாக இருக்கும் எடைக் குறைப்பு முறை பற்றிய பதிவு..!

ஜி.எம்.டயட் ;


கார்கள் மற்றும் மோட்டார் பாகங்கள் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனமான ஜெனரல் மோட்டார் தன் ஊழியர்களுக்காக கொண்டு வந்த டயர் சார்ட் தான்  ஜி.எம்.டயட்.அமெரிக்காவில் உள்ள அக்ரிகல்சர் அண்ட்ஃ புட் அண்ட் டிரக் அட்மினிஸ்ட்ரேஷன் டிபார்ட்மென்ட் (Agriculture and food and drug administration) இந்த ஃ புட் சார்டை அங்கீகரித்துள்ளது 

ஒரே வாரத்தில் ஐந்து கிலோ எடைக்குறைப்புக்கு உத்திரவாதம் என்ற ரிசல்ட் ஆச்சரியப்படும் படி இருக்கவே,இப்போது உலகம் முழுவதும் ஹிட் அடித்துக் கொண்டு இருக்கிறது.  

இதற்கான நிபந்தனை இந்த டயட்டை எடுத்துக் கொள்பவர்கள் எந்த வித உடல் நோய்களும் இல்லாமல் இருத்தலும்,ஒரு நாளைக்கு மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடித்தாலும் ஆகும்.

இனி ஒரு வாரத்திற்கான சார்ட்..
1.வாழைப்பழம் தவிர்த்து மற்ற எல்லாப் பழங்களையும் நாள் முழுக்க எவ்வளவு வேண்டுமானானும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம் .(உடனே பலாப்பழம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமா எனக் கேட்கக் கூடாது )
2 .அவித்த உப்பு சேர்த்த உருளைக்கிழங்கு சாப்பிடலாம்.தவிர சமைத்த மற்றும் சமைக்காத காய்கறிகளை (சாலட்டுக்களை ) எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.(இந்த இடத்தில் இது எல்லாம் சாப்பிட்ட பின்பா அல்லது முன்பா என்ற கேள்வி வரக்கூடாது )
3 .பழங்கள் காய்கறிகளை எவ்வளவு முடியுமோ சாப்பிடலாம் . உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர .
4 .வாழைப்பழங்கள்,மூன்று டம்ளர் பால்,இரவுக்கு கொஞ்சம் சூப் (இப்படியெல்லாம் இருந்து உடம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி உங்கள் மனதிற்குள் வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை)
5 .வெஜிடேரியன் நபர்கள் ஒரு கப் சாதம்,ஆறு பெரிய தக்காளி,சாப்பிடலாம். நான்வெஜிடேரியனாக இருந்தால் பீஃ ப் (மாட்டுக்கறி )  ஆறு பெரிய தக்காளி,  சாப்பிடலாம்.எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாராளமாக தண்ணீர் அருந்தலாம்.(என்ன ஒரு தாராளமான மனம் பாருங்கள் )
6 .வெஜிடேரியன் நபர்கள்  ஒரு கப் சாதம் (காய்கறிகளை) சமைத்தோ ,சாலட்டுகளாகவோ,எவ்வளவு முடியுமோ சாப்பிடலாம்.   நான்வெஜிடேரியனாக இருந்தால்  ஒரு கப் சாதம் ,  பீஃ ப் (மாட்டுக்கறி ) இது தான் முழுநாளுக்கான உணவு (என்ன ஒரு பெருந்தன்மை )
7 .ஒரு கப் சாதம்,நிறைய பழச்சாறு சமைத்த காய்கறிகள் இவற்றை முடிந்த அளவு சாப்பிடலாம்.

 தேவை உள்ளவர்கள் பயன் படுத்தி வெற்றி அடைய வாழ்த்துக்கள்..! 

சகோதரி.
ஆயிஷா பேகம்.

Wednesday, 15 February 2012

இன்றைய பெண்களின் நிலை மாறியுள்ளதா ...?

நம் சமூகத்தில் மார்க்கம் சொல்லிய படி நம் பெண்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்கும் கூட்டம் ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மிதிக்கும் ஒரு கூட்டம், இந்த நிலை ''எல்லா சமூகத்திலும் ''தான் இருக்கிறது , என்றாலும் ,நம் மார்க்கம் நமக்கு அப்படித் தான் சொல்லி தந்திருக்கிறதா என்பது தான் கேள்வி..? 


பெண்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை அவர்கள் வெறும் போகப் பொருள்கள் என்று இருந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கௌரவமான இடத்தைக் கொடுத்து அவளுக்கென கண்ணியத்தையும் ,உரிமையையும் மேன்மையையும் ,எல்லா வற்றிலும் சம அந்தஸ்தைத் தந்ததோடு மட்டும்அல்லாமல்,பெண் பிள்ளைகளை நல்லபடி வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு சுவனம் செல்லும் வாய்ப்பு உண்டு என சொன்ன மார்க்கம் நம் மார்க்கம்.


ஆனால், நடைமுறையில்.? இத்தனை வருடம் கழிந்தும் பெண்களுக்கானதிருமணம் குறித்தான உரிமை சரியான முறையில் வழங்கப் பட்டிருக்கிறதா ..? என்றால்,இல்லை என்பதை வருத்ததுடன் தான் சொல்ல வேண்டியது  இருக்கிறது. நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் திருமணத்தை எத்தனை வீடுகளில் பெண்களின் மனம் அறிந்து திருமணம் செய்து கொடுக்கிறார்கள்..? 


திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறுதியான ஒரு ஒப்பந்தம்.அது எல்லாவிதத்திலும் பொருத்தம் கொண்டதாக இருக்க வேண்டும்.நேசத்திலும்,நட்பிலும்,,இன்பத்திலும், துன்பத்திலும் நம் வாழ்க்கை முழுவதும் கைபிடித்து வரக்கூடிய துணை,தன் விருப்பம் போல் அமையக் கொடுத்து வைக்க வில்லை என்றால் அதை விட பெரிய நஷ்டம் ஒரு பெண்ணுக்கு இவ்வுலகத்தில் வேறு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது.


திருமணத்தை குரான் ஒரு உறுதியா வாக்குறுதி (மீசாக்)  என்கிறது. (4:21) . 


திருமணத்திற்கு  பெண்களின் சம்மதம் முக்கியம் என்றும் மணமகனை பெண்ணும் மணப்பெண்ணை பையனும் பார்த்து ஒருவருக்கொருவர் பிடித்து இருந்தால் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது நபி மொழி .ஆனால் நடைமுறையில் ? சில வீடுகளில் மணமகனின் புகைப்படமாவது காட்டப் படுகிறது,ஆனால்,இன்னும் சில வீடுகளில் அதுவும் இல்லை. 


விதவைப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும். கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெற வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, அஹ்மத், தாரிமி, தாரகுத்னீ, தப்ரானீ)

முதலில் நம் பெண்களுக்கே நம் மார்க்கம் தனக்காக என்ன சொல்லியிருக்கிறது என தெரியுமா என்பது பெரிய கேள்விக்குறி ..? இன்னும் எங்க மதத்தில் மாப்பிள்ளையைப் மணப்பெண் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கு என்று சொல்பவர்களே அதிகம்.யார் வந்து இவர்களிடம் வந்து இதை சொன்னார்களோ தெரிய வில்லை? 


பொதுவாக பெண்கள் மணமகனைப் பார்க்காமலே திருமணம் நடந்தாலும், 

கணவன் என ஆனதும் தன்னுடையவன் என்ற உணர்வோடு எல்லாவற்றையும் தனக்கு பிடித்ததாக ஆக்கிக் கொள்வார்கள் .தன் கணவன் என்றும் ,தன் கணவனின் குடும்பத்தை தன் குடும்பமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இயல்பிலேயே உண்டு.  அது பெண்களுக்கே அமைந்த இயற்கையான குணம் என்று கூட சொல்லலாம்.



ஆனால் திருமணத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பிடிக்க வில்லை என வரும் போது அது மிகப் பெரும் இழப்பாக ஆகிறது. மணமகனைப் பிடிக்காமல்( முதலில் அப்படி வெளிப்படையாக சொல்லமுடியுமா என்பதும் கேள்வி தான் ) வரும் பெண்ணுக்கு அவ்வளவு எளிதாக மறுமணம் செய்ய முடியுமா..? இன்றைய காலகட்டத்தில்..?


 நம் பெண் நாம் சொல்லும் எல்லாவற்றிக்கும் தலை ஆட்டுவாள் என்பதை மனதில் வைத்து கொண்டு அவளுக்கும் விருப்பம் என்று ஒன்று இருக்கும் என்பதை மறந்து .தன் இஷ்டத்திற்கு தன் அந்தஸ்தையும், தன் போலி கௌரவத்தையும் மனதில் வைத்து கொண்டு  முடிவு எடுக்கும் பெற்றோர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தன் நிலையில் இருந்து அவர்கள் மாற வேண்டும்.


என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள். அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி) நூல்: (புகாரி 5139, 6945, 6969)


நம் மார்க்கம் பற்றிய தெளிவும், மார்க்கம் சொல்லிய படி தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என பெண்கள் ஒரு உறுதியான முடிவு எடுக்காத வரை  இந் நிலை மாறப் போவதில்லை.ஆனால் அதை சொல்வதற்கு முதலில் அவளுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். பெரும்பாலும் அது பெண்ணுக்கு வழங்கப் படுவதில்லை.என்பது ஒரு கசப்பான உண்மை. 


இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்.பெண்களுக்கு சரியான முறையில் முடிவு எடுக்க தெரியாது ,அனுபவம் பத்தாது என்பதாகும் .பிடிக்காத கணவனைக் கட்டிக் கொண்டு ஐம்பது வருடம் வாழ்வதை விட மனதிற்கு பிடித்த கணவனைக் கட்டிக் கொண்டு பத்து வருடம் வாழ்ந்தாலேபோதும்என்று தான் ஒவ்வொரு பொண்ணும் நினைப்பாள். 


நல்ல மார்க்க அறிவு உள்ள பெண்களிடம் தான் தனக்கு என்ன தேவை என்பது பற்றியத்  தெளிவு இருக்கிறது.அதுவே சமயத்தில் அடுத்தவர்கள் பார்வையில் திமிர் பிடித்தவள் என சொல்லப் படுகிறது. ஆனால் யார் என்ன சொன்னாலும் தனக்கான உரிமையை ஒரு பெண் விட்டு கொடுக்க கூடாது.அனுமதிக்க பட்ட விதத்தில் நம் விருப்பத்தை வெளிப்படையாக சொல்லி பெற்றோர்களை ஏற்கச் செய்வது ஒவ்வொரு பெண்ணின் கட்டாயக் கடமை ஆகும். 


ஆனால், தனக்கு தகுதி இல்லாத மார்க்கத்திற்கு முரணான மாப்பிள்ளையை ஒரு பெண் தேர்வு செய்தாள், எனில் அதை முற்றிலுமாக புறக்கணிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் 


என்னிடம் ஒரு இளம் பெண் வந்தார். 'என் தந்தை தனது சகோதரர் மகனுக்கு என்னை மணமுடித்து விட்டார். அதில் எனக்கு விருப்பமில்லை' என்று என்னிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் வரும் வரை இங்கேயே அமர்வாயாக என்று நான் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் வந்ததும் அவரது தந்தையை அழைத்து வரச் செய்தார்கள். (விசாரித்த பின்) அந்தப் பெண்ணிடமே முடிவெடுக்கும் அதிகாரத்தை அளித்தார்கள். (அதாவது உனக்கு விருப்பமிருந்தால் அவருடன் வாழலாம். விருப்பமில்லா விட்டால் திருமணம் ரத்தாகிவிடும் என்றார்கள்.) அதற்கு அப்பெண் 'அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையின் முடிவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெண்களுக்கு இந்த விஷயத்தில் அதிகாரம் உள்ளது என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கவே நான் வந்தேன் என அப்பெண் கூறினார். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: நஸயீ) 


ஆனால், அதே சமயத்தில் தானாக ஒரு பெண் தகுந்த பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் செய்வதை மார்க்கம் அனுமதிக்க வில்லை.ஒரு சில பெண்கள் தானாகவே பிடித்தவர்களுடன் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதை மார்க்கம் தடை செய்கிறது.இதுவும் பெண்ணின் பாதுகாப்பு கருதியே,மணமகன் ஒருவேளை மணமகளைப் பிரிய நேரிட்டால் யாரிடம் அந்தப் பெண் முறையிடுவாள்.?  ஒரு திருமணம் முழுமை பெற நான்கு முக்கிய அம்சங்கள் வேண்டும். 


1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலி)
 2. மணமக்களின் முழுமையான சம்மதம் (ஈஜாபு கபூல்)
 3. இரு நீதமுள்ள சாட்சிகள்
 4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
 என நபி(ஸல்) அவர்கள் நிபந்தனையிட்டார்கள்.
 அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
 



இங்கு மஹரைப் பற்றி பேச வில்லை. அதை குறித்து தனி பதிவாகத் தான் போட வேண்டும். மஹர் வேண்டாம் என சொல்லி விட்டு ''மறைமுகமாக மாப்பிள்ளை வீட்டார் வைக்கும் ''நிபந்தனைகளும் கோரிக்கைகளும் '' யாரை ஏமாற்ற எனத் தெரிய வில்லை.அல்லாஹ் காப்பாற்றணும்.


தன் பெற்றோர் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தன் பெற்றவர்களின் மனம் வேதனைப் படக் கூடாது  என்பதற்காக,திருமணம் செய்து கொண்டு மனதிற்குள் வேதனைப் பட்டுக் கொண்டு வாழும் சகோதரிகள் எத்தனையோ பேர்.

ஆனால் அவர்கள் அதை வெளியில் சொன்னாலும், நம் சமுதாயம் அவர்களை சும்மா விடுமா எனத் தெரிய வில்லை உடனேகண் ,காது,என இன்ன பிற உறுப்புகளை வைத்து பேசி அவர்களை ஒன்றும் பேச விடாமல் செய்து விடும். என்பதே உண்மை. இன்ஷா அல்லாஹ் இனி மேலாவது வரும் காலங்களில் இந்த நிலை மாற வேண்டும்.


இறைவனும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அக்காரியத்தில் மாற்று கருத்துக் கொள்வதற்கு இறை நம்பிக்கைக் கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. இறைவனுக்கும் அவன் தூதருக்கும் எவராவது மாறு செய்தால் அவர்கள் பகிரங்க வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33:36)


சகோதரி.
ஆயிஷா பேகம்.














Related Posts Plugin for WordPress, Blogger...